புனித வெள்ளி ஏன் புனிதமானது?

புனிதமாக்கும் புனித வெள்ளி!

ஒரு நீதிபதி குற்றவாளியாக நிற்கும் தனது சொந்த மகன் மீது தீர்ப்பு வழங்குவதை கற்பனை செய்து பாருங்கள்! நீதியையும் அதின் தீர்ப்பையும் மாற்ற முடியாத தந்தையாக, அவர் ஒரு குற்றவாளியான மகனின் தவறுக்கான தண்டனையை ஏற்க தனது இருக்கையில் இருந்து கீழே இறங்கி தண்டனையை தன்மீது ஏற்றுகொள்கிறார். தன் மகன் வாழ்நாள் முழுவதும் விடுதலையோடும் மகிழ்ச்சியோடும் வாழ்வதற்காக அந்த விந்தையான / அபூர்வமான செயலைச் செய்தார்.

அதைத்தான் இயேசு ஒரு வெள்ளிக்கிழமை அன்று செய்தார்.

மனிதர்களாகிய நாம் செய்த பாவங்களுக்கு/தவறுகளுக்கு தக்க தண்டனையை ஏற்க முடியாது என்பதை அறிந்து, அவர் நம் பாவநிலைமைக்கு தம்மை தாழ்த்தினார். பாவமில்லாத தந்தையுள்ளம் கொண்ட இயேசு, மனிதகுலத்தின் பாவங்களைச் சுமக்க, தாமாக முன்வந்து, சிலுவையில் தம்மை பலியாக்கினார்.

நீதிபதி முன்வந்து குற்றவாளியின் இடத்தைப் ஏற்றது போல, இயேசு குற்றவாளிகளாகிய நம்முடைய இடத்தில் தண்டனையை ஏற்று மரித்தார். ஆம்! இயேசு மரணத்தை தழுவியதால் நாம் நிறை வாழ்வைப் பெறுகிறோம்.

அன்று சிலுவையில் நடந்ததே வரலாற்றில் மாபெரும் பரிமாற்றம்!

இயேசு நம்முடைய தண்டனையை எடுத்துக்கொண்டு, அதற்கு பதிலாக நமக்கு மன்னிப்பையும், மனஅமைதியையும், மகிழ்ச்சியையும் கொடுத்துவிட்டார். ஒவ்வோர் ஆண்டும் புனித வெள்ளி இதைத்தானே நமக்கு நினைப்பூட்டுகிறது!

ஆகையால், நித்தம் வாதிக்கும் நினைவுகள் (எண்ணங்கள்), குட்டும் குற்ற உணர்வு, தனிமையின் துயரம், எதிர்கால பயம், மற்றும் ஆட்கொல்லி போதை போன்ற போராட்டங்களுக்கு சிலுவையில் மாத்திரமே நிரந்தரத் தீர்வு உண்டு.

இதுவே காலம் காலமாக இயேசுவை நம்பும் எல்லோரின் அனுபவச் சான்றாக இருந்தும், வளர்ந்தும் வருகிறது.

Facebook இல் எங்களுக்கு செய்தி அனுப்பவும்